புனே: ஐபிஎல் 5 தொடரின் பிளே ஆப் சுற்றின் முதல் போட்டியில் வெற்றிப் பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. இதனை கொண்டாட மைதானத்தில் வெற்றி வலம் வந்த அணி உரிமையாளர் ஷாருக்கான், பார்வையாளர்களில் யாரையோ மிரட்டி ஷூவை கையில் எடுக்க முயன்றதாக கூறப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஷாருக் கான் என்றாலே சர்ச்சை என்றாகி விட்டது சமீப காலமாக. ஐபிஎல் 5 தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்து, நேற்று முன்தினம் பிளே ஆப் சுற்றின் முதல் போட்டி நடைபெற்றது.
புனேயில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. அதிக விறுவிறுப்பை ஏற்படுத்திய இப்போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்று இறுதிப் போட்டியில் நுழைந்தது.
இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றியை கொண்டாட, அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கான், மைதானத்தில் வீரர்களுடன் வலம் வந்தார். மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்த ஷாருக்கான் குட்டிக்கரணம் அடித்தும், ஆரவாரமிட்டும் மைதானத்தில் இங்கும் அங்குமாக ஓடினார்.
அப்போது அவர் பார்வையாளர்களை பார்த்து டாடா காட்டி கொண்டிருந்த போது, பார்வையாளர்களில் குறிப்பிட்ட யாரையோ மைதானத்திற்குள் இறங்கி வருமாறு அழைத்தார். ஆனால் அவரது செய்கை டாடா காட்டுவது போல இருந்ததால், யாரும் அதை பெரிய பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் அதன்பிறகு ஷாருக்கான் கோபமாக தனது ஷூவை கையில் எடுத்து மிரட்ட முயன்றதாக கூறப்படுகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக் கொண்டாடங்களுக்கு இடையே அதிகம் கவனிக்கப்படாமல் விடப்பட்ட இந்த சம்பவம் கேமராவில் சிக்கியுள்ளது.
ஏற்கனவே மும்பை மைதானத்திற்கு குடித்துவிட்டு வந்து, ரகளையில் ஈடுபட்டதாக ஷாருக்கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் மும்பை மைதானத்திற்குள் நுழைய ஷாருக்கானுக்கு 5 ஆண்டு கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புனே மைதானத்தில் அரங்கேறியுள்ள நேற்றைய சம்பவம் ஷாருக்கானுக்கு மற்றொரு தலைவலியை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment