
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கூடுதலாக 12,500 பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் 3 கேலரிகள் அமைக்கப்பட்டன. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்(சிடிஎம்ஏ) மற்றும் மாநகராட்சியின் அனுமதியில்லாமல், விதிமுறைகளை மீறி இந்த 3 கேலரிகளும் கட்டப்பட்டதாக எழுந்த புகாரால் புதிய கேலரிகள் சீல் வைக்கப்பட்டன.
இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டின் 2வது தகுதிச் சுற்று மற்றும் இறுதி போட்டிகள் இன்றும், நாளை மறுதினமும் இந்த மைதானத்தில் நடைபெற உள்ளது. எனவே, போட்டிகளை காண ஏராளமான ரசிகர்கள் பிற மாநிலங்களில் இருந்தும் வருவார்கள் என்பதால், சீல் வைக்கப்பட்ட கேலரிகளை திறக்க அனுமதி வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மனுதாக்கல் செய்தது.
இந்த மனுவை நீதிபதிகள் பி.ராஜேந்திரன், வி.தனபாலன் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கிரிக்கெட் போட்டியை அதிகம் பேர் பார்த்து ரசிப்பதற்காக புதிய கேலரிகளுக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் கேளிக்கை வரி கிடைக்கும் என்பதால் அனுமதி வழங்குமாறு வாதிட்டார். ஆனால், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக் காட்டி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் புதிய கேலரிகளை ஒரு வாரம் மட்டும் தற்காலிகமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதி கொடுத்தனர். மேலும், கேலரியில் அசம்பாவிதங்கள் மற்றும் பாதுகாப்புக்கு கிரிக்கெட் சங்கமே முழுப்பொறுப்பு என்றும் தெரிவித்தனர்.
சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து புதிய கேலரிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று விறுவிறுப்பாக நடந்தது. சென்னை அணி விளையாட உள்ளதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் வந்து ரூ.500 மற்றும் ரூ.750 கட்டணங்கள் கொண்ட டிக்கெட்டுகளை வாங்கி சென்றனர்.
No comments:
Post a Comment