
முதலில் பேட் செய்த டெல்லி டேர் டெவில்ஸ் அணி ஜெயவர்தனே, சேவாக், பீட்டர்சன் அதிரடியில் 207 ரன்களைக் குவிக்க மும்பை இந்தியன் அணி துவக்கத்தில் விக்கெட்டுகளை சரியவிட்டு பிறகு ராயுடு, தினேஷ் கார்த்திக் மூலம் 170 ரன்களை எட்டி தோல்வி தழுவியது.
டாஸ் ஜெயித்த மும்பை கேப்டன் ஹர்பஜன்சிங் முதலில் டெல்லியை பேட் செய்ய அழைத்தார். இதையடுத்து கேப்டன் ஷேவாக்கும், மஹேலா ஜெயவர்த்தனேவும் டெல்லி அணியின் இன்னிங்சை தொடங்கினர். 2-வது ஓவரின் கடைசி பந்தில் இருந்து டெல்லி அணியின், ரன்வேட்டை படலம் தொடங்கியது. இருவரும் மும்பை பந்து வீச்சை துவம்சம் செய்தனர். தனது நாட்டவரான மலிங்காவின் ஒரே ஓவரில் ஜெயவர்த்தனே 3 பவுண்டரிகளை ஓட விட்டு அசத்தினார். இருவரின் அதிரடியால் டெல்லி அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. இந்த அபாயகரமான ஜோடியை பிரிக்க முடியாமல் மும்பை பவுலர்கள் திணறினார்கள்.
ஷேவாக் 40 ரன்களில் இருந்த போது விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஸ்டம்பிங் வாய்ப்பை வீணடித்தார். இதன் பின்னர் பொல்லார்ட்டின் ஒரே ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி விளாசி பதம் பார்த்த ஷேவாக் அந்த ஓவரில் அரைசதத்தையும் கடந்தார். இந்த தொடரில் தொடர்ச்சியாக அவர் எடுத்த 3-வது அரைசதமாகும். சிறிது நேரத்தில் ஜெயவர்த்தனேவும் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
இந்த சீசனில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்களை சேகரித்த இந்த ஜோடி 135 ரன்களில் பிரிந்தது. ஜெயவர்த்தனே 55 ரன்களில் (42 பந்து, 8 பவுண்டரி) கேட்ச் ஆனார். அடுத்து வந்த கெவின் பீட்டர்சனும் பட்டையை கிளப்ப, டெல்லி அணியின் ரன்ரேட் 10 ரன்களுக்கு குறையாமல் ராக்கெட் வேகத்தில் பறந்து கொண்டிருந்தது
இதற்கிடையே ஷேவாக் 73 ரன்களில் (39 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆனார். அவர் இந்த தொடரில் 300 ரன்களையும் (8 ஆட்டத்தில் 309 ரன்) கடந்தார். அடுத்து வந்த இர்பான் பதான் (0) அதே ஓவரில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து ராஸ் டெய்லர் களம் புகுந்தார்.
சில விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும், கெவின் பீட்டர்சன் ஸ்கோரை குறையாமல் பார்த்துக் கொண்டார். சுழற்பந்து வீச்சாளர் ராபின் பீட்டர்சன் வீசிய ஒரே ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்சர் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். இதில் `ஸ்விட்ச் ஹிட்' முறையில் அவர் ஒரு சிக்சர் அடித்த போது, சக வீரர்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
19-வது ஓவரில் ராஸ் டெய்லர் (15 ரன், 7 பந்து 2 சிக்சர்), யோகேஷ் நாகர் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை மலிங்கா காலி செய்தார். என்றாலும் கெவின் பீட்டர்சன் அரைசதத்தை எட்டியதோடு, அணியையும் 200 ரன்களையும் கடக்க வைத்தார்.
20 ஓவர்களில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. கெவின் பீட்டர்சன் 50 ரன்களுடன் (26 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். ஐ.பி.எல். வரலாற்றில் டெல்லி அணி 200 ரன்களை தாண்டியது இது 2-வது முறையாகும்.
அடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்கு தொடக்கத்திலேயே பேரிடி விழுந்தது. பிளிஸ்சார்ட் (0), சச்சின் தெண்டுல்கர் (7 ரன்), ரோகித் ஷர்மா (12 ரன்) ஆகியோர் 19 ரன்னுக்குள் பெவிலியன் திரும்பினர். இந்த சரிவில் இருந்து அணியை மீட்க தினேஷ் கார்த்திக்கும் (40 ரன், 28 பந்து, 7 பவுண்டரி), அம்பத்தி ராயுடுவும் (62 ரன், 39 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) கடுமையாக போராடினார்கள். அவர்களது போராட்டம் தோல்வி வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது.
20 ஓவர்களில் மும்பை அணியால் 9 விக்கெட்டுக்கு 170 ரன்களே எடுக்க முடிந்தது.
No comments:
Post a Comment