Tuesday, 22 May 2012

நடிகர் சங்கத் தேர்தல்... ராதாரவிக்கு எதிராக குமரிமுத்து போட்டி!

Kumari Muthu Contest Against Radha Ravi Nadigar Sangam நடிகர் சங்கத்துக்கு அடுத்த மாதம் நடக்கும் தேர்தலில் போட்டியிடும் ராதாரவியை எதிர்த்து களமிறங்கப் போவதாக காமெடி நடிகர் குமரிமுத்து கூறினார்.

நடிகர் சங்கத்துக்கு அடுத்த மாதம் (ஜூன்) 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. மனுக்களை வாபஸ் பெற 30-ந்தேதி கடைசி நாள். 

இதில் தலைவர் பதவிக்கு சரத்குமாரும், செயலாளர் பதவிக்கு ராதாரவியும் மீண்டும் போட்டியிடுகின்றனர். நடிகர் சங்க பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடப் போவதாக சிரிப்பு நடிகர் குமரிமுத்து அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நடிகர் சங்க தேர்தலில் நான் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறேன். நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன். நடிகர் சங்கத்தில் ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காகவே தேர்தலில் நிற்கிறேன். ராதாரவிக்கு போட்டியாகவோ அவரை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலோ நான் நிற்கவில்லை.

ராதாரவி எனக்கு சகோதரர் போன்றவர். அவரது தந்தையான நடிகவேல் எம்.ஆர்.ராதா எனக்கு மானசீக குரு. திரையுலகில் மட்டுமின்றி அரசியலிலும் புரட்சி ஏற்படுத்தியவர் எம்.ஆர்.ராதா. பெரியார் சொல்லும் கருத்துக்களை அப்படியே மேடையில் பேசி மக்களிடம் கொண்டு சென்றவர். அவரது மகன் ராதாரவி எனது மரியாதைக்கு உரியவர்.

நடிகர்-நடிகைகளுக்கு நிறைய உதவிகள் செய்ய என்னிடம் திட்டம் உள்ளது. நடிகர் சங்கத்தின் மூலம்தான் அதை நிறைவேற்ற முடியும். எனவேதான் களத்தில் இறங்கியுள்ளேன். வெற்றி பெறுவேனா, தோல்வி அடைவேனா என்பது முக்கியம் அல்ல. எந்த முடிவு வந்தாலும் ஏற்பேன். வேட்புமனு தாக்கல் செய்த பிறகு நிச்சயம் வாபஸ் பெறமாட்டேன்," என்றார் குமரிமுத்து.

இந்த இரு நடிகர்களில் ராதாரவி அதிமுககாரர். குமரிமுத்து பரம்பரை திமுககாரர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment