Tuesday, 24 April 2012

டேர்டெவில்சுடன் வாரியர்ஸ் பலப்பரீட்சை

புனே : ஐபிஎல் டி20 சீசன் 5ல் இன்று மாலை நடக்கும் லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் , புனே வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. கங்குலி தலைமையிலான புனே வாரியர்ஸ் அணி நடப்பு தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணி இதுவரை 7 லீக் ஆட்டங்களில் விளையாடி (4 வெற்றி, 3 தோல்வி) 8 புள்ளிகள் பெற்றுள்ளது. டேர்டெவில்சுடன் டெல்லியில் நடந்த லீக் ஆட்டத்தில் ஆல் ரவுண்டராக அசத்திய கங்குலி ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பந்துவீசிய அவர், அதிரடி வீரர் கெவின் பீட்டர்சனின் விக்கெட்டை வீழ்த்தியது ஆட்டத்தில் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது.

இந்த நிலையில், புனே சுப்ரதா ராய்  ஸ்டேடியத்தில் இன்று மாலை 4.00 மணிக்கு தொடங்கும் போட்டியில் இந்த இரு அணிகளும் மீண்டும் பலப்பரீட்சையில் இறங்குகின்றன. டெல்லி அணி 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கிறது. அந்த அணியில் கேப்டன் சேவக், பீட்டர்சன், ஜெயவர்தனே, இர்பான், டெய்லர் என அதிரடி வீரர்கள் அணிவகுப்பதால் பேட்டிங் வரிசை மிரட்டலாக அமைந்துள்ளது.

அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் புனே அணியிலும் உத்தப்பா, ரைடர், கங்குலி, ஸ்மித், மேத்யூஸ் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். சம பலம் வாய்ந்த அணிகள் மோதும் இப்போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த போட்டிக்கான வெற்றி வாய்ப்பு குறித்து கங்குலி கூறுகையில், ‘டி20 போட்டி தனிநபருக்கான ஆட்டம் இல்லை. கூட்டு முயற்சி அவசியம். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். அணி உரிமையாளர்களிடம் இருந்து எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. மே 5ம் தேதி நடக்கவுள்ள கொல்கத்தா , புனே மோதும் ஆட்டம் பாகிஸ்தான் , இந்தியா போட்டியை போல பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுவது தவறு. அது சாதாரண லீக் ஆட்டம்தான்’ என்றார்.

No comments:

Post a Comment