இஸ்லாமாபாத், மே. 2- ஒசாமா பின்லேடன் கடந்த ஒரு ஆண்டு முன்பு வரை, உலகையே அச்சுறுத்தி வந்த, கொடூரமான தீவிரவாதி. உலகில் பல்வேறு நாடுகளிலும் நடந்துள்ள குண்டுவெடிப்பு சம்பவங்களிலும், இவனது தலைமையிலான அல்கொய்தா-வின் பங்களிப்பு, உதவி இல்லாமல் இருக்காது.
அமெரிக்காவின் கவுரவம் என வர்ணிக்கப்பட்ட இரட்டை கோபுரத்தை வெடிகுண்டுகள் நிரப்பிய விமானத்தை மோதவிட்டு, தரைமட்டமாக்கியது, ‘அல்கொய்தா’ பயங்கரவாதிகள்தான்.
இந்தியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில், தீவிரவாத தாக்குதலில் பெரும்பாலானவை அல்-கொய்தா தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டவை.
நியூயார்க் இரட்டை கோபுரம் தாக்கப்படுவதற்கு முன்பு வரை இவனை பற்றி அமெரிக்கா அதிகம் கவலைப்படவில்லை. இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட பிறகு, இவனை பிடிக்க அமெரிக்கா தீவிரம் காட்ட தொடங்கியது.
சில வருடங்களுக்கு முன்பு, உலக அளவில் தேடப்படும் குற்றவாளியாக பின்லேடன் அறிவிக்கப்பட்டான். இந்த அறிவிப்புக்கு பிறகு தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டான். தலிபான்கள் ஆதிக்கம் நிறைந்த ஆப்கானிஸ்தான் மற்றும் அரபு நாடுகள் ஏதாவது ஒன்றில் அவன் மறைந்து வாழலாம் என்று நம்பப்பட்டது.
அங்கெல்லாம் அமெரிக்காவின் உளவுத்துறையும் மற்ற நாடுகளின் உளவு நிறுவனங்களும் அவன் இருப்பிடத்தை கண்டறியும் முயற்சியில் இறங்கின. சில நாடுகள் அவனுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்ததால், அவன் எங்கிருக்கிறான்? என்பதை கண்டுபிடிப்பதில் உளவு அமைப்புகளுக்கு சிரமம் ஏற்பட்டது.
எனினும் அமெரிக்காவும், நேசநாடுகளும் முயற்சியை கைவிடவில்லை. இறுதியில், அவன் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பது உறுதியானது. பாகிஸ்தானில் பின்லேடன் மறைவிடத்தை கண்டுபிடிக்க ஒரு யுக்தியை கையாண்டது.
அந்நாட்டு டாக்டர்கள் உதவியுடன் போலியான மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்தது. இந்த குழுவில் உள்ளவர்கள் கணக்கெடுப்பதுபோல், வீடு வீடாகச் சென்று, யார்... யார் இருக்கிறார்கள்? என்று ரகசியமாக நோட்டமிட்டனர். அதற்கு பலனும் கிடைத்தது.
ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள அபோதாபாத் என்ற ஊரில், ஆடம்பரமான பங்களாவில் அவன் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அமெரிக்கா அவசர அவசரமாக அந்த பங்களாவில் இருந்து சற்று தள்ளி, ராணுவ முகாமை ஏற்படுத்தியது.
குண்டுவீச்சு மற்றும் அதிரடி தாக்குதலில் நன்கு தேர்ச்சி பெற்ற கமாண்டோ படையினர் வரவழைக்கப்பட்டனர். அங்கிருந்தபடியே பின்லேடன் பதுங்கி இருந்த பங்களாவை கண்காணித்தனர். மேலும், அந்த பங்களா சுற்றுச்சுவரின் உள்பகுதியில் ரகசிய கேமராக்களை ஒட்ட வைத்து, உள்ளே இருப்பவர்களின் நடமாட்டத்தையும், பின்லேடன்கூட யார்...யார் இருக்கிறார்கள்? என்றும் கண்காணித்தனர்.
அதன் அடிப்படையில், அந்த பங்களாவில் அதிரடியாக புகுந்து, தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவ அதிகாரிகள் யுக்திகளை வகுத்தனர். அந்த யுக்தி செயல்படுத்த சீல்ஸ் என்று பெயரிடப்பட்ட, அதிரடிப்படை வீரர்கள் குழு ஏற்படுத்தப்பட்டது.
அந்த படையினர் 2.5.2011 அன்று, அதிரடியாக பின்லேடன் பங்களாவுக்குள் புகுந்து சோதனை போட்டனர். ஒரு அறையில் பதுங்கி இருந்த பின்லேடனையும், அவனது மகனையும், ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
இந்த அதிரடித் தாக்குதல் சம்பவத்தை அமெரிக்காவில் இருந்தபடி அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் நேரில் பார்த்தனர் என்றும் அப்போது தகவல்கள் வெளியாகின. பின்லேடன் கொலை சம்பவத்தை வீடியோ திரையில் பார்த்தபடி ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்டோர் பரபரப்பான முகங்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், அங்கு மற்ற அறைகளில் இருந்த பின்லேடனின் 3 மனைவிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பின்லேடன் உடலை யு.எஸ்.எஸ்- கார்ல் விஷன் என்ற அதிநவீன கப்பலில் ஏற்றிச் சென்று கடலுக்கு அடியில் ராணுவம் புதைத்து விட்டது. பூமியில் புதைத்தால், அவனது ஆதரவாளர்கள் அவனுக்கு அங்கு நினைவிடம் எழுப்பினாலும் எழுப்பி விடுவார்கள் என்றே, யாரும் அடையாளம் காண முடியாத அளவுக்கு கடலுக்கு அடியில் புதைக்கப்பட்டதாக, சொல்லப்படுகிறது.
உலகை அச்சுறுத்தி வந்த பயங்கரவாதி பின்லேடன் கொல்லப்பட்டு இன்றோடு ஓராண்டு ஆகிறது. அவனது ஆதரவாளர்களும், அல்-கொய்தாவின் கிளை அமைப்புகளும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ளனர். அமெரிக்காவை பழி வாங்குவோம் என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றனர்.
எனவே அமெரிக்காவிலும், பின்லேடன் ஆதரவு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளை கண்காணித்து, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, பாகிஸ்தானையும் அமெரிக்கா வலியுறுத்தி இருக்கிறது.
அல்கொய்தாவின் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டு ஓர் ஆண்டு நிறைவு தினம் நெருங்கும் நிலையில் பாகிஸ்தான் அல்கொய்தாவிற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். பார்மன் அலி ஷின்வாரி எனப்படும் 30 வயதுடைய இந்நபர் பாகிஸ்தானின் கைபர் கணவாயைச் சேர்ந்த பழங்குடி இனத்தவர் என்பதுடன் ஆங்கில அறிவும் கணினி தகவல் தொழில்நுட்ப அறிவும் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடன் உடன் பிறந்த சகோதரர்கள் அனைவரும் வெவ்வேறு தீவிரவாத குழுக்களில் ஏற்கனவே அங்கம் வகித்து இருப்பவர்கள் என்பதுடன் இந்திய எல்லையிலுள்ள ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் அவ்வப்போது ஊடுருவி மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை திட்டமிடுபவர்களும் ஆவர்.
ஏற்கனவே 2008-ல் பாகிஸ்தானின் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி இவரது வீட்டை அழித்ததுடன் இவரின் பல உறவினர்களைக் கைது செய்தனர். இதையடுத்து இவர் தனது குடும்பத்தினருடன் எல்லையிலுள்ள வஷிர் ஷடானுக்கு இடம் பெயர்ந்தார். மேலும் பாகிஸ்தானின் தெரிக்-ஏ-தலிபான் இயக்கத்திலும் பங்கு ஆற்றினார்.
அல்கொய்தாவினரால் பாகிஸ்தானிலிருக்கும் அமெரிக்கர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என எச்சரித்துள்ள அமெரிக்க அரசு, அவர்களை பாதுகாப்பாக இருக்கும்படியும் வெளி இடங்களுக்கு செல்வதை தவிர்க்கும்படியும் கோரி உள்ளது.
No comments:
Post a Comment