Sunday, 6 May 2012

எனக்கு 10 சதவீத ரசிகர்களின் ஆதரவே இருந்தது: கொல்கத்தா கேப்டன் காம்பீர்

எனக்கு 10 சதவீத ரசிகர்களின் ஆதரவே இருந்தது: கொல்கத்தா கேப்டன் காம்பீர்ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தாவில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 ரன்னில் புனே வாரியர்சை வீழ்த்தியது.
 
முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்தது. கேப்டன் காம்பீர் 36 பந்தில் 56 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), மேக்குல்லம் 42 ரன்னும் எடுத்தனர். மேத்யூஸ், புவனேஸ்குமார் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
 
பின்னர் விளையாடிய புனே வாரியர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன் எடுத்தது. கேப்டன் கங்குலி 36 ரன்னும், மேத்யூஸ் 35 ரன்னும் எடுத்தனர். டிலாங்க் 3 விக்கெட் கைப்பற்றினார்.  
 
இந்த வெற்றி குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் காம்பீர் கூறியதாவது:-
 
இரு அணிகளுக்கும் ரசிகர்களின் ஆதரவு சம அளவில் இருந்தது. இதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கங்குலி கிரிக்கெட்டின் சகாப்தம். கொல்கத்தாவில் அவருக்கு ஆதரவு குறையவில்லை. எங்களுக்கு உள்ளூரில் போட்டியில் விளையாடியதுபோல் இல்லை. வெளியூரில் விளையாடியது போன்ற நிலை இருந்தது. 10 சதவீத ரசிகர்களே எனக்கு ஆதரவாக உற்சாகம் செய்து இருக்கலாம்.
 
எங்களது தொடக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனால் மிகப்பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. எங்களது பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக சுனில் நரேன் அபாரமாக வீசினார். அவரது பந்துவீச்சு வெற்றிக்கு உதவியாக இருந்தது. அவரது பந்துவீச்சு இதே மாதிரி தொடர்ந்து சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். கொல்கத்தா அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதற்கு வீரர்களின் கூட்டு முயற்சிதான் காரணம்.
 
இவ்வாறு காம்பீர் கூறினார்.  
 
தோல்வி குறித்து புனே வாரியர்ஸ் கேப்டன் கங்குலி கூறியதாவது:-
 
மிகவும் நெருங்கி வந்த நாங்கள் தோல்வி அடைந்தோம். வெற்றி பாதையை தொட இயலாமல் ஆகிவிட்டது. ஈடன் கார்டனில் விளையாடுவது மிகவும் முக்கியமானதாகும். எங்களது தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. தொடக்கத்திலேயே விக்கெட்டுகள் சரிந்துவிட்டன.
 
நரேன் மிகவும் சிறப்பாக பந்து வீசினார். அவர் மட்டும் இல்லையென்றால் நாங்கள் வெற்றி பெற்று இருப்போம். இனி வரும் போட்டிகளிலாவது வெற்றி பெற முயற்சிப்போம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.  
 
கொல்கத்தா அணி பெற்ற 7-வது வெற்றியாகும். அந்த அணி 15 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 12-வது ஆட்டத்தில் ஷேவாக் தலைமையிலான டெல்லி டேர்டெவில்சை நாளை (7-ந்தேதி) எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் காம்பீரின் சொந்த ஊரான டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடக்கிறது.
 
புனே வாரியர்ஸ் 8-வது தோல்வியை தழுவியது. அந்த அணி தொடர்ந்து 5 ஆட்டத்தில் தோற்றது. புனே வாரியர்ஸ் 13-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 8-ந்தேதி சந்திக்கிறது.

No comments:

Post a Comment