சென்னையில் இல்லாத வசதி வேறு எங்கும் இல்லை என்று தாராளமாக கூற முடியும். காரணம் அத்தனை பள்ளிகளும் கிட்டத்தட்ட நல்ல வசதியுடன்தான் இருக்கின்றன. நல்ல ஆசிரியர்களும் நிறையவே உள்ளனர். ஆனாலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்க சென்னை மாணவ, மாணவியர் கடுமையாக தடுமாறும் நிலை சமீப காலமாக ஏற்பட்டுள்ளது.
சென்னையைத் தாண்டி உள்ள மாணவ மாணவியர்தான் கடந்த சில ஆண்டுகளாக ஸ்கோர் செய்து வருகின்றனர். இந்த விஷயத்தில் தற்போது சென்னை பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது.
ஒரு காலத்தில் முதலிடம் என்றாலே அது ஏதோ ஒரு சென்னைப் பள்ளியாகத்தான் இருக்கும். ஆனால் இன்று நிலைமை தலைகீழாகி விட்டது. நாமக்கல், நெல்லை உள்ளிட்ட வெளி மாவட்ட மாணவ, மாணவியரே தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு சென்னைக்கு பேரதிர்ச்சி கிடைத்துள்ளது. சென்னையைச் சேர்ந்த ஒரு மாணவர் கூட முதல் மூன்று இடங்களில் வரவில்லை. முதல் மூன்று இடத்தைப் பிடித்துள்ள மாணவ, மாணவியர் எண்ணிக்கை மொத்தம் 6 பேராகும். இந்த ஆறு பேருமே நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை பள்ளி மாணவர்கள் சரியாக படிப்பதில்லையா அல்லது அவர்களுக்கு என்ன பிரச்சினை என்பது உண்மையிலேயே கவலைக்குரிய ஒன்று. மாணவர்களின் கவனச் சிதறல், தேவையில்லாத பழக்க வழக்கங்கள், படிப்பதில் ஆர்வமின்மை, பள்ளிகளில் போதனா முறையில் உள்ள கோளாறு என பல காரணங்களை சென்னையின் தோல்விக்குக் காரணமாக கூற முடியும்.
சென்னையைப் பொறுத்தவரை பல பள்ளிகளில் நல்ல ஆசிரியர்கள் இருந்தாலும் கூட டியூஷன் என்ற அரக்கன் உள்ளே புகுந்து மாணவ, மாணவியரை சீர்குலைப்பதாக கூறப்படுகிறது. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவியர்கள் பள்ளிகளில் படிப்பதை விட டியூஷனில்தான் அதிகம் படிக்க அட்வைஸ் செய்யப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதனால் பொருள் விரயம்தான் ஆகிறதே தவிர மாணவ, மாணவியரின் கல்விதரம் உயர்ந்ததாக தெரியவில்லை என்பதையே தற்போதைய ரிசல்ட் காட்டுகிறது.
இந்தக் கோளாறுகளை உடனடியாக நீக்கிச் சரி செய்ய அத்தனை பள்ளிகளும் ஒட்டுமொத்தமாக முயல வேண்டும். இல்லாவிட்டால் சென்னை பள்ளிகள் முதலிடத்தைப் பிடிப்பது என்பது கனவாக மாறி விடும் அபாயம் உள்ளது.
 
No comments:
Post a Comment