கொல்கத்தா: புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு அளிப்பார்கள் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கெளதம் கம்பிர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐபிஎல் 5 தொடரில் பல வீரர்களும் தங்கள் சொந்த மண்ணை விட்டு, வேறு அணிகளில் சேர்ந்து ஆடி வருகின்றனர். இதனால் தங்களின் சொந்த மண்ணில் விளையாடும் போது, ரசிகர்களுக்கு யாரை ஆதரிப்பது என்ற குழப்பம் ஏற்படுகிறது.
கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்து பிரபல கிரிக்கெட் வீரராக ஜொலித்தவர் செளரவ் கங்குலி. ஆனால் ஐபிஎல் 4 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் கங்குலியை கைவிட்டது. கடைசிக் கட்டத்தில் புனே வாரியர்ஸ் அணியில் சேர்ந்து ஆடினார். இந்த நிலையில் புனே வாரியர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த யுவராஜ் சிங், புற்றுநோய் கட்டியினால் பாதிக்கப்பட்டு ஓய்வில் சென்றார்.
இதனால் ஐபிஎல் 5 தொடரில் புனே வாரியர்ஸ் அணிக்கு கேப்டனாக செளரவ் கங்குலி பொறுப்பேற்றார். அணியை சிறப்பாக வழிநடத்தி வரும் கங்குலி, இந்த ஆண்டு அணிக்கு கோப்பையை பெற்று தரும் முயற்சியில் தீவிரமாக உள்ளார். இந்த நிலையில் மே 5ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ள போட்டியில் புனே வாரியர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன.
கொல்கத்தா ரசிகர்களுக்கு பிடித்த செளரவ் கங்குலி புனே வாரியர்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்க உள்ளார். எதிரணியாக களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கெளதம் கம்பிர் கேப்டனாக உள்ளார். இதில் யாரை ஆதரிப்பது என்று தெரியாமல் கொல்கத்தா ரசிகர்களுக்கு குழம்பி போய் உள்ளனர்.
இது குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கெளதம் கம்பிர் கூறியதாவது
கொல்கத்தாவில் ஆடும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தான் ரசிகர்கள் அதிக ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன். மற்ற அணிகள் எதுவும் கொல்கத்தாவை சேர்ந்தவை அல்ல.
புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரசிகர்களின் ஆதரவு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கொல்கத்தாவை சேர்ந்தது தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எங்கள் அணி சிறப்பாக விளையாடும் போது, கொல்கத்தா ரசிகர்களின் முகத்தில் புன்னகையை காண முடியும். எனவே ரசிகர்களின் ஆதரவு அணியை பொறுத்தது, தனி வீரரை பொறுத்தது அல்ல என்றார்.
போட்டியை காண வரும் ரசிகர்கள் இரு அணிகளுக்கும் சம ஆதரவு அளிக்கும் பட்சத்தில் ஆட்டம் விறுவிறுப்பு மிகுந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
No comments:
Post a Comment