தரம்சாலா: கடந்த 5 ஐபிஎல் தொடர்களில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் இந்த ஆண்டுடன் ஐபிஎல் தொடர்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், அதிரடி வீரருமான ஆடம் கில்கிறிஸ்ட், கடந்த 2008ல் இருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகு ஐபிஎல் தொடர்களில் ஆண்டுதோறும் ஆடி வருகிறார். ஐபிஎல் 2வது தொடரில் கில்கிறிஸ்ட் தலைமையில் செயல்பட்ட டெக்கான் சார்ஜ்ர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு மாறிய கில்கிறிஸ்ட், அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்ற கில்கிறிஸ்ட் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, கடந்த 19ம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பிளே-ஆப் சுற்றிற்கு தகுதி பெற முடியாமல் போனது.
இந்த நிலையில் போட்டிக்கு பிறகு பேட்டி அளித்த கில்கிறிஸ்ட், ஐபிஎல் போட்டிகளில் நான் பங்கேற்பது இதுவே கடைசியாக இருக்கும் என்றார்.
இது குறித்து அவர் கூறியதாவது
ஐபிஎல் போட்டிகளில் நான் பங்கேற்பது இதுவே கடைசியாக இருக்கும் என்று நினைக்கிறேன். எனது வீட்டிற்கு திரும்பிய பிறகு வருங்கால திட்டங்களை குறித்து யோசிக்க வேண்டும். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இக்கட்டான சூழ்நிலையில் பயணித்த அணியின் வீரர்கள் சிறப்பாக போராடினர். ஒரு அணியை வழிநடத்துவது என்பது மனஅழுத்தம் கொண்ட பணியாகும்.
டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 160 முதல் 170 ரன்கள் வரை எடுத்திருந்தால் வெற்றிப் பெறலாம் என்ற சூழ்நிலை இருந்தது. ஆனால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி சிறப்பாக பந்துவீசி, பீல்டிங் செய்தனர் என்றார்.
5 ஐபிஎல் தொடர்களில் மொத்தம் 67 போட்டிகளில் பங்கேற்றுள்ள கில்கிறிஸ்ட் 2 சதம், 10 அரைசதம் உட்பட இதுவரை 1,775 ரன்களை எடுத்துள்ளார். 40 வயதான கில்கிறிஸ்ட் இந்த ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன், பயிற்சியாளர், உடல்நல வல்லுநர் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment