ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டெல்லி அணிக்கு பதிலடி கொடுத்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. முதலில் விளையாடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்னே எடுக்க முடிந்தது. இர்பான் பதான் 22 பந்தில் 36 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), ஜெயவர்த்தனே 30 ரன்னும், ஷேவாக் 9 பந்தில் 23 ரன்னும் எடுத்தனர். பின்னர் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்து 6 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் காம்பீர் கூறியதாவது:-
சுழற்பந்து வீச்சாளர்களின் பணி சிறப்பாக இருந்தது. சுனில் நரைன் மிகவும் சிறப்பாக பந்துவீசி வருவது பாராட்டத்தக்கது. ஷேவாக்கும், நானும் மிக சிறந்த நண்பர்கள். எங்கள் இருவருக்கும் நல்ல உறவு இருக்கிறது. ஐ.பி.எல். போட்டி என்பதால் இருவரும் வேறுவேறு அணியில் உள்ளோம்.
நான் எப்போதுமே அவரது ஆட்டத்தை ரசிப்பேன். அவரை நான் மிகவும் மதிக்கிறேன். இவ்வாறு காம்பீர் கூறினார்.
தோல்வி குறித்து டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் ஷேவாக் கூறியதாவது:-
நாங்கள் 20 முதல் 25 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம். மிடில் ஓவரில் எங்கள் அணி ஆதிக்கம் செலுத்த தவறிவிட்டது. கொல்கத்தா வீரர் சுனில் நரைன் மிகவும் சிறப்பாக பந்து வீசினார். 153 ரன் என்பது நல்ல ஸ்கோர்தான். எங்களது பீல்டிங்கும், பந்துவீச்சும் மோசமாக இருந்தது. இதுவே தோல்விக்கு காரணம்.
சுழற்பந்து வீரர் நதீமை சேர்த்தது சரியான முடிவுதான். காம்பீர் வேகப்பந்தை சிறப்பாக ஆடுவார் என்பதால் தேர்வு செய்யப்பட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
ஆட்டநாயகன் விருது பெற்ற காலிஸ் கூறும்போது, இந்த சீசனில் எங்கள் அணி ஆட்டம் சிறப்பாக உள்ளது. கேப்டனும் நன்றாக செயல்படுகிறார். புள்ளிகள் பட்டியலில் முதல் அல்லது 2-வது இடத்தை பிடிப்பது எங்கள் இலக்கு என்றார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெற்ற 8-வது வெற்றியாகும். இதன்மூலம் 17 புள்ளிகள் பெற்று அந்த அணி முதலிடத்தை பிடித்தது. 3 ஆட்டத்தில் தோற்றது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை. டெல்லி அணியிடம் ஈடன்கார்டனில் நடந்த போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 8 விக்கெட்டில் தோற்றது. இதற்கு கொல்கத்தா அணி பதிலடி கொடுத்தது. கொல்கத்தா அணி 13-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வருகிற 12-ந்தேதி எதிர்கொள்கிறது.
டெல்லி அணி 3-வது தோல்வியை தழுவியது. 16 புள்ளிகளுடன் அந்த அணி 2-வது இடத்துக்கு பின் தங்கியது. அந்த அணி 12-வது ஆட்டத்தில் டெக்கான் சார்ஜர்சுடன் 10-ந்தேதி மோதுகிறது.
No comments:
Post a Comment