சென்னை: ஐ.பி.எல்.5-வது தொடரில் நடப்பு சாம்பியானான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தம்மை வீழ்த்திய புனேவாரியர்ஸ் அணியை இன்று மீண்டும் எதிர்கொள்வதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஐ.பி.எல். தொடர்களைப் போலவே சற்றே தடுமாற்றத்துடன் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி உள்ளது. இதுவரையான 5 ஆட்டங்களில் 3-ல் தோல்வியை சந்தித்திருக்கிறது. ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகளை மட்டும் வீழ்த்தியிருக்கிறது. வெறும் 4 புள்ளிகளை மட்டுமே சென்னை சூப்பர்கிங்ஸ் அணி பெற்றுள்ளது.
சென்னை சூப்பர்கிங்ஸ்
முரளி விஜய் மீது அப்படி என்ன டோனிக்கு ராசியோ.... 5 போட்டிகளிலும் மொத்தமே 31 ரன்களைத்தான் எடுத்திருக்கிறார். 20 ஓவர் ஆட்டங்களில் அடித்து ஆட வேண்டிய நிலையில் சொற்ப ரன்களிலேயே தொடர்ந்து வெளியேறும் முரளி விஜய்யை இந்த முறையாவது டோனி மாற்றுவாரா என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.. தொடக்க ஆட்டக்காரரரான பிளெஸ்ஸிலின் ஆட்டம் பிரச்சனை இல்லை. சென்னை அணியில் மற்ற வீரர்களின் ஆட்டம் இதுவரை குறிப்பிடும்படியாக இல்லாதது ஒரு காரணம். ஒவ்வொரு போட்டியிலும் ஏதோ ஒரு வீரர் அதிக ரன்களைக் குவிப்பது என்பது சென்னை அணியின் ஒட்டுமொத்த பார்மையே கேள்விக்குறியாக்கிவிடும். தொடக்கத்தில் சுணக்கம் காட்டிய ரூ10 கோடி ஜடேஜா கடந்த போட்டிகளைப் போலவே இம்முறையும் ரசிகர்களை ஏமாற்றாமல் இருக்கவேண்டும்.
புனேவாரியர்ஸ்
புனே வாரியர்ஸ் அணியைப் பொறுத்தவரையில் ஏற்கெனவே சென்னையை சாய்த்திருக்கிறது. மொத்தம் 6 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. கங்குலி தலைமையிலான அந்த அணி இந்த ஐ.பி.எல். தொடரில் கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது ரைடர், உத்தப்பா, ஸ்மித், சாமுவேல்ஸ் என ஜாம்பவான்களின் ஐக்கியத்தால் அந்த அணி வலுவாக இருக்கிறது. அசோக் டிண்டாவின் புயல்வேக பந்துவீச்சும் செம பலம்.. ஆனால் தசைபிடிப்பால் அவதிப்பட்ட டிண்டா இன்று களம் இறங்குவாரா என்ற கேள்வியும் உள்ளது.
சென்னை சூப்பர்கிங்ஸ் தமது தடுமாற்றத்திலிருந்து மீள வேண்டிய நிலையில் தம்மை வீழ்த்திய புனே வாரியர்ஸ் அணியுடன் மோதுவதால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாகவே இருக்கும் என்றே கூறலாம்.
No comments:
Post a Comment